Sunday, April 4, 2010

மகான்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள்.
பகவான் திரு ரமணரின் ஆசிரமத்திற்குள் சில திருடர்கள் புகுந்தனர்; பகவான் திரு ரமணரை தாக்கிவிட்டுச் சென்றனர். மறுநாள் காவலர் அந்த திருடர்களை பிடித்து வந்து பகவான் முன் நிறுத்தினார்.
" இவர்களில், உங்களை அடித்தது யார்? “என்று காவலர் கேட்டார்.
" நான் யாரை அடித்தேனோ, அவனே என்னை அடித்தான் " என பகவான் அருளினர்.
இதற்கு என்ன பொருள்? தன் வினை தான் தன்னைச் சுடும் என்பதா? அப்படியானால் பகவான் யாரையும் தாக்கக் கூடிய சுபாவம் உள்ளவரா! அல்லவே, முன்பு ஒரு சமயம், பகவான் தியானத்தில் இருக்கின்ற போது, அவர் வயதில் உள்ள சில முரட்டுச் சிறுவர்கள், அவர் மீது கற்கள் வீசியும், இன்ன பிற செயல்களாலும் துன்புறுத்தினார்கள். அப்போதும் பகவான் எந்த எதிர் செயலும் செய்யாமல், அந்த இடத்தை விட்டு அகன்று சென்றனர். அப்படிப்பட்டவரா இந்த ஜென்மத்தில் யாரையாவது தாக்கி இருப்பார்! நிச்சயம் இருக்க முடியாது!
‘நான் யாரை அடித்தேனோ ' என்று அவர் குறிப்பிட்ட இறந்த காலம் என்பது, நாம் சொல்லும் நேற்று, கடந்த ஆண்டு இல்லை அறியாத பருவ காலமோ அல்லது முக்காலமும் உணர்ந்த ஞானிகள் கருதும் முன் ஜென்மமாகவோ இருக்கலாம். எதுவானாலும், எப்போதோ செய்த வினையின் பயனை தான் இப்போது அடைந்தேன் என்பதை மறைமுகமாக அருளினர். அப்படியானால், மற்றவர்களால், நமக்கு நேரும் துன்பங்களை, தன் வினை தான் தன்னைச் சுடும் என்று பொருத்துக்க் கொள்ள முடியுமா?
வினை விதைத்தவர் வினை அறுப்பார் என்பது இயற்கையின் விதி. இந்த வினை சுழற்சியிலிருந்து விடுபடுவது தான் மனிதர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று பெரியோர்கள் அருளிச் சென்றனர். அச் சுழற்சியிலிருந்து விடுபட்டவர் பகவான் திரு ரமணர்! பகவானைப் போல முக்காலமும் உணரும் ஆற்றல் நமக்கு இல்லாவிட்டாலும், அவர் காட்டும் வழியில் வாழ விரும்பினால் முடியும்.

No comments:

Post a Comment