வித்தியாசமான அனுபவம்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. மாலை நேரம். உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். வாகனம் தீடிரென்று நின்றுவிட்டது. மெக்கானிக் கடையை தேடிக்க் கொண்டே சென்றேன். இருள் கவியத் தொடங்கியது.
அந்த நடைபாதையில் ஒரு முதியவர் பொருட்களை முட்டைக் கட்டிக்கொண்டிருந்தார். அங்கிருந்த பொருட்களை வைத்து அது ஒரு மெக்கானிக் கடை என்பதை உணர்ந்தேன். வேகமாக அருகில் சென்றேன்.
" வண்டி ரிப்பேர் ஆயிடுச்சி " என்றேன்.
உடனே வந்தார். அழுக்கான பனியன் அணிந்திருந்தார். பரிவான முகம்; பாசமான முகம் என்று கூட சொல்லலாம். நீண்ட நாள்கள் வறுமையின் பிடிக்குள் இருப்பவரை போன்ற தோற்றம்.
அவர் 'உடனே வந்தார்' என்று சொல்வதை விட பறந்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். வந்த வேகத்தைப் பார்த்தால் இன்று காலையில்லிருந்து ஏதும் போனியாகவில்லையோ என்று தோன்றியது. அய்யயோ! நம்ம மாட்டிக்கிட்டோமா..! அதையும் எதையும் பண்ணிட்டு இவ்ளோ கொடு அவ்ளோ கொடுன்னு கேப்பாங்க... சரி... இந்த நாளுக்கும், நேரத்துக்கும், 50 ரூபா கேட்டாலும் கொடுத்துதிட்டுத் தான் போகணும்... மனம் எண்ணிக்கொண்டிருந்தது.
சிறிது நேரம் பழுதுபார்த்தார். வாகனம் இயங்கிய பாடில்லை. சட்றேன்று கார்புரட்டர் அடிக்கடி பழுதாவது நினைவுக்கு வந்தது.
" அப்பப்போ கார்புரட்டர் ரிப்பெராகும் " என்றேன்.
" ஓஹோ! ஆனா இது புது மடல் இன்னும் இத நான் ரிப்பேர் பண்ணதில்ல...." என்றவாறே கார்புறேட்டரை தேடினார்.
திக்கென்று இருந்தது. நல்லவேள என்வண்டியை பிரிச்சு கத்துக்காம, வெளிப்படையா சொன்னிக்களே... கேட்டத கொடுத்திட்டு உடனே புறப்படணும் என்று மனம் துரிதப்படுத்தியது.
" சரி விட்டிடுங்க நான் வேர எங்கியாவது பாத்துக்கிறேன்... இப்ப பாத்ததுக்கு மட்டும் எவ்வளவுன்னு சொல்லுங்க.." என்றேன்.
" நான் என்ன பண்ணேன்... வண்டி ஸ்டார்ட் ஆகலையே... என்ன கேக்கறது. வேணாம் போங்க..." என்றார் தொழில் நேர்மையோடு.
சிவுக்கேன்று இருந்தது.
" இல்லை… நீங்க ஏதாவது வாங்கிக்கணும்..." என்றேன்.
அவர் முகத்தில் தயக்கமும் குழைவும் பரவியிருந்தது. கட்டாயப்படுத்தி ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன்.
No comments:
Post a Comment