Wednesday, December 21, 2011

தியானம்.

சித்தத்தை, காலி செய்வது தியானம்;
நிரப்புவது அல்ல தியானம்.
மறப்பது தியானம்;
ஞாபகம் அல்ல தியானம்.

மனப்பதிவுகளை,
வேடிக்கைப் பார்ப்பது தியானம்,
பாதிப்படைவது அல்ல தியானம்.
மனதை, புத்திக்கு வசப்படுத்துவது தியானம்;
மனதை ஒடுக்குவது அல்ல தியானம்.

புத்தியால்,
பதிவுகளை களையெடுப்பது தியானம்;
விதைப்பது அல்ல தியானம்.
புத்தி எல்லையை கடந்து செல்வது தியானம்;
புத்திக்குள் சுருங்குவது அல்ல தியானம்.

செயலில்,
நோக்கத்தை கவனிப்பது தியானம்;
செயலின்,
எதிர்விளைவை சிந்திப்பது அல்ல தியானம்.
அகங்காரத்தை,
செயலின் கருவியாக்குவது தியானம்,
கர்த்தாவாவது அல்ல தியானம்.

இயற்கையின் சுபாவத்தை அறிவது தியானம்;
இயற்கையின் இயக்கத்தில்,
குறை காண்பதல்ல தியானம்.
சிந்தனை கோணத்தை மாற்றுவது தியானம்;
சிந்திப்பதை நிறுத்துவது அல்ல தியானம்.

ஆசைகளை கடந்து செல்வது தியானம்;
ஆசைகளை அடக்குவது அல்ல தியானம்.
உண்பது, உறங்குவது போல்,
காலச்செயல் அல்ல தியானம்.
மனம், மெய், மொழி வழி,
இயங்குவதே தியானம்.

மனதில்,
இறைவனுக்கு இடம் ஒதுக்குவது தியானம்;
இயற்கையோடு இசைந்து வாழ்வது தியானம்.

Saturday, December 10, 2011

ஆசை ஒப்பனைக் கலைஞன்.

ஆசை ஒப்பனைக் கலைஞன்.
ஒருவரைப் பிடித்துவிட்டால்,
மனதுக்கு,
அவரின் குறை கூட நிலவு கரை.
பிடிக்காவிட்டால்,
குணம் கூட குறை.
பலன் கருதா பாசம்
நிஜ முகம்.
பலன் கருதும் பாசம்
ஒப்பனை முகம்.
வண்ணப் பொடிகளின்
பெட்டி மனம்;
ஆசை ஒப்பனைக் கலைஞன்;
சருகையும், இலையாகக் காட்டும் ஆற்றல்.
ஆசையின் ஆட்சி அடிதளத்தில்,
அறிவு அங்கே அடிமை.
மத யானைக்கு அங்குசமா..?
ஆசை ஒப்பனைக் கலைஞன்.