Saturday, July 6, 2013

யோசிக்க வைத்தவை

அது மழைக்காலம். சர்க்கரை நோய் விளைவாக அப்பாவுக்கு சிறுநீரகப் பாதையில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அது ஒரு நான்கு மாடி கட்டிடம். பிரதான சாலையில் அமைந்திருந்தது. சன்னல்களில் கண்ணாடி கதவுகள் பொருத்தப்பட்டிருந்தது. மூன்றவது மாடியில் அறை கொடுக்கப்பட்டிருந்தது. அப்பாவை பார்ப்பதற்கு தினம் யாரவது வருவார்கள். அன்று ஒரு தம்பதியர் வந்திருந்தார்கள். நான் அறையை விட்டு வெளியே வந்து வராண்டாவில் நடந்து கொண்டிருந்தேன்.
மாலை சுமார் ஆறு அல்லது ஆறரை மணி இருக்கும். அப்போதுதான் நல்ல மழை பெய்து விட்டிருந்தது. சாலையி நீர் தேங்கிருந்தது. வாகனகளின் இரைச்சல் அதிகமாக இருந்தது. வராண்டாவில் இருந்த ஒரு கண்ணாடி கதவு பொருத்தப்பட்ட சன்னல் அருகில் சென்றேன். வானத்தைப் பார்த்தேன். ஒரு வினாடி அதிர்ந்து போனேன். இதயம் வேகமாக துடித்தது, உடல் ஜில்லிடுப்போனது. பகீர் என்று இருந்தது. இனம் புரியாத பரவசமாகவும் இருந்தது. பயந்து போய் இரண்டடி பின் சென்றேன், ஏதோ ஒரு உத்வேகம் வர முன் சென்று பார்த்தேன். என் பார்வையை என்னால் நம்ப முடியவில்லை. கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தேன். அதே காட்சி தான்.
வானம் மேகமுட்டம் இல்லாமல் இருந்தது. பூமியில் இருப்பது போலவே ஒரு சாலை வானத்தில் தெரிந்தது. அதில் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தது. ஆனால் சாலையின் ஒரு பகுதி மட்டுமே தெரிந்தது. அதில் செல்லும் வாகனங்கள் முன்று அல்லது நான்கு அடி தூரம் சென்றதும் மறைந்துவிடுகிறது. இக்காட்சியைப் பார்த்ததும் சொர்கலோகம் தான் நம் கண்ணில் தெரிகிறதா , நம் பார்வை திறன் கூடிவிட்டதா. வானத்தில் நிகழும் அதிசியத்தை நாம் பார்கிரோமா, என்று இன்னும் எவ்வளவோ எண்ணங்கள் என் மனதில் பொங்கிக் கொண்டிருந்தது.
சில வினாடிகள் நன்றாக் உற்றுப்பார்த்தேன். ஒரு சந்தேகம் வந்தது. சொர்கலோகத்துல தார் ரோடா? எப்படியோ இப்போது என் மனம் அந்த அதிர்ச்சியை தாங்கும் சக்தி பெற்று சம நிலை அடைந்தது. இதயம் சாதாரணமாகத் துடித்தது. குழந்தைத்தனம் மறைந்தது. படிப்பறிவு வேலை செய்தது. இக்காட்சி, அந்தப் பிரதானச் சாலையின் பிரதிபிம்பம். ஏதோ ஒரு கோணத்தில், பிரதானச் சாலையின் ஒரு பகுதி, இந்த சன்னல்களின் கண்ணாடிக் கதவுகள் முலம் வானத்தில் பிரதிபலிக்கிறது என்று தெளிந்தேன். அதை உறுதி செய்து கொள்ள அக்கட்சியை நன்றாக கவனித்தேன். அங்கே செல்லும் வாகனத்தைப் பூமியில் உள்ள பிரதானச் சாலையில் தேடினேன். காணவில்லை. ஆனால் அக்காட்சி அந்த பிரதான சாலையின் பிரதிபிம்பம் தான் என்பதில் சாந்தேகமே இல்லை. சொர்கலோகதுல ஏது ஆட்டோ கார்லாம்.
இதில் ஒரு ஆச்சர்யம். எனக்கு பக்கவாட்டில் பிரதானச் சாலை இருந்தது, அச்சாலையின் காட்சி எனக்கு நேர் எதிராக வானத்தில் தெரிந்தது. இது எப்படி சாத்தியம். ஒளி, எந்தந்த கோணத்தில், எந்தந்த கண்ணாடியில் பட்டு வானத்தில் பிரதிபலிக்கிறது. இந்த சந்தேகத்தை உடனே தீர்த்துக்கொள்ள சன்னல் வழியாக தலையை நீட்டி, எட்டி, எல்லா கண்ணாடிக் கதவுகளையும் அதன் கோணத்தையும் ஆராய்ந்தேன். மூளையை கசக்கினேன். என் அறிவுக்கு எதுவும் எட்டவில்லை. சிறிது நேரத்தில் அப்பா குரல் கொடுத்தார். வந்தவர்கள் சென்றிருக்க வேண்டும். அந்த இடத்தை விட்டு அகன்றேன். அக்காட்சி மட்டும் என் மனதை விட்டு அகலவில்லை.
அப்பாவின் அறுவைச் சிகிச்சை நன்றாக முடிந்தது. விட்டிற்குச் சென்றதும் இணையதளத்தில், ஒளி பிரதிபலிப்பு பற்றிய தகவல்களை தேடித் படித்தேன். நீண்ட நாட்கள் படித்தேன் ஒன்றும் புரியவில்லை. நாட்கள் ஓடின. ஆனால் அக்காட்சியும் , எனக்கு பக்கவாட்டில் இருந்த சாலையின் காட்சி எப்படி எனக்கு நேர் எதிராக தெரிந்தது, என்ற சந்தேகமும் என் மனதை விட்டு ஓடவில்லை.
போக்குவரத்து சமிகைக்காக வாகனத்தில் காத்துக் கொண்டிருக்கும் நேரம், என் முன்னால் நிற்கும் காரின் பக்கவாட்டுக் கண்ணாடியில் தெரியும் உருவங்கள் எங்கே இருக்கின்றன என்று தேடுவேன். கண்ணாடிக்கு எதிர்ல இருக்கிற உருவம் தானே கண்ணாடியில தெரியும், எப்படி அங்க எங்கயோ இருக்கிறவர் இந்த கண்ணாடியில தெரியறார், என்று வாகனம் ஓட்டும் போதும் , சிந்திக்க சமயம் கிடைக்கும் போதும் பல நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இல்லை குழம்பிக் கொண்டிருந்தேன்.
இப்படி பல நாட்கள் அக்காட்சியைப் பற்றி சிந்தித்து சிந்தித்து அறிவியல் உண்மை ஒன்றும் புலப்படவில்லை. ஆனால் ஒரு உண்மை மட்டும் நன்றாகப் புரிந்தது.
அங்கும் இங்கும் பார்த்துவிட்டு நம்மை யாரும் பார்க்கவில்லை, நாம் செய்வது யாருக்குத் தெரியும் என நினைத்துக் கொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், செய்கையும் எப்படியோ, ஏதோ ஒரு கோணத்தில், எங்கேயோ யாருக்கோ, தெரிந்து கொண்டுதான் இருக்கிறது, பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.