Wednesday, June 9, 2010

எறும்புகள்

மேஜை மீது இருந்த சில பாத்திரங்களில், அந்தப் பாத்திரத்தைச் சுற்றி, எறும்புகள் சாரை சாரையாக சுற்றி வந்து கொண்டிருந்தன. இனிப்பு இருக்குமிடம் எறும்புக்குத் தெரியும் என்பார்கள். அந்தப் பாத்திரத்திற்குள் இனிப்பு இருந்தது; இறுக்கமாக மூடப்பட்டிருந்தது. நிச்சயமாக இந்த எறும்புகளால் அதற்குள் புக முடியாது. இருந்தும் ஏன் அந்தப் பாத்திரத்தையே சுற்றி வருகின்றன..? இந்த சந்தேகம் நெடு நாள்களாக எனக்கு உண்டு. இன்று அதை இந்த எறும்பிடமே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். சுற்றி வந்து கொண்டிருந்த எறும்புகளில் ஒன்றை அழைத்தேன். வந்தது.

நீ எவ்வளவு நேரம் சுற்றி வந்தாலும் உன்னால அந்தப் பாத்திரத்திற்குள் நுழைய முடியாது தெரியுமா...” என்றேன்.

" தெரியும்... " என்றது தீர்க்கமாக

"என்ன தெரியுமா...! அப்புறம் ஏன் அந்தப் பாத்திரத்தையே சுற்றி வந்துகிட்டு இருக்கீங்க..?” என்றேன் வியப்புடன்.

நமக்கு தேவையானது எங்க இருக்குதோ, அங்கியே தான் நாமளும் இருக்கணும். யாராவது வந்து இந்தப் பாத்திரத்தில் உள்ள பொருளை எடுக்கலாம்... அப்போ கொஞ்சம் கீழே சிந்தலாம்... அத நாங்க எடுத்துப்போம்...இல்லை... பாத்திரத்தையே எடுத்துகிட்டு போகலாம்... அப்போ நாங்களும் பின்தொடர்ந்து போவோம். எங்க அதை திறந்து பொருளை எடுக்கிறாங்களோ, அங்க ஏதாவது கீழே சிந்துதான்னு பாத்துகிட்டு இருப்போம்... அப்படியும் இல்லனா... அதை அவங்க சாப்பிடும் போதாவது நிச்சயமா சிந்தும்... அப்போ எடுத்துப்போம்.... அதிர்ஷ்டம் இருந்தா கொஞ்சம் கூடுதலா கிடைக்கும்இதுக்காகத் தான் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம்" என்றது.

ஒரு வேலை அவங்க கொண்டு போற இடத்துக்கு உங்களால போக முடியலனா... அவ்வளவு நேரம் சுத்தி வந்தது வீண் தானே..." என்றேன்.

எப்போதாவது அப்படி நிகழ்வது உண்டு... அப்போதெல்லாம், நாம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்னு நினைப்போமே ஒழிய..., நேரம் வீணாயிட்டதா நினைக்க மாட்டோம். காரணம், சுற்றி வரும் போது அக்கம் பக்கத்துல நோட்டம் விடுவோம்... அங்க ஏதாவது உணவுப் பொருள் கிடைக்குமான்னு பார்ப்போம்... ஒருவேள, நீங்க சொன்ன மாதிரி, இந்த பாத்திரத்தில் உள்ள உணவு கிடைக்காம போனாலும் கூட .. இந்த உணவைத் தேடி வந்ததால் தானே.. இதோ.. உணவு கிடைக்கக் கூடிய, இந்த புதுப் புது இடங்களை தெரிஞ்சிக்க முடிந்ததுபலன் கிடைக்காவிட்டாலும், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக உழைக்கும் நேரம் எப்போதும் வீணாக போகாது. இப்ப நான் உங்களோட பேசிக்கிட்டு இருக்கிற நேரம் தான் வீண்... சரி நான் போய் சுற்றி வரேன்.." என்று சுறு சுறுப்பாக சென்றது.

கொடுக்க மனம் இல்லாத சில பணக்காரர்களையும், சூழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் நோக்கமும், இந்த எறும்புகளைப் போல் தான் இருக்குமோ...!

Friday, June 4, 2010

காடு


பூமித் தாயின் நுரையீரல் காடு,
புற்று நோய்க் கிருமிகளாக நாம்,
அவர் நுரையீரலை அரித்துக் கொண்டிருக்கிறோம்..!
அன்னைக்கு வைத்தியம் பார்ப்பது யார்?