Monday, November 22, 2010

சிவப்பு மேகங்கள்
சாம்பல் பூத்த நெருப்பு குவியல்களாய், அந்த சிவப்பு மேகங்கள்;
வானத்தில் இன்று தீ மிதி திருவிழாவோ?
காற்றின் கைவண்ணத்தில் எத்தனை எத்தனை மேக ஓவியங்கள்,
இந்த வான் திரையில்..!
அழியாமல் நிலைத்தது எத்தனை..?
அணு அளவாய் இருந்தது,
பின் ஓர் அடியாய் பிறந்தது,
இன்று ஆறடியாய் மாறிய,
இந்த தேக ஓவியங்களில் நிலைத்தது எத்தனை?
நிலையாமையை உணர்த்தி,
இதோ... அகன்றது நிறம் மாறிய காலை மேகங்கள்.

Wednesday, November 17, 2010

மகான்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள்

பகவான் ரமணரின் ஆஷ்ரமத்தில், அவருக்கு சேவை செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவர், அருகில் இருந்த நகரத்தில் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தார். இது அப்பெண்ணின் உறவினர்களுக்குத் தெரியவந்தது. அந்த ஆசிரமவாசியை பிடித்து கொன்றுவிட திட்டமிட்டனர்.

ஒரு நாள் இரவு, அவனை அப்பெண் வீட்டில் கையும் களவுமாக பிடித்தனர். அவனை கொன்ற பின் உடலை யாருக்கும் தெரியாமல் புதைக்க இடம் வேண்டும்; இடம் கிடைத்த பின் கொள்ளலாம் என்று அவன் கை கால்களை கட்டி ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அந்த நேரத்தில் ஆசிரமவாசி எப்படியோ அங்கிருந்து தப்பித்து ஆசிரமத்தை நோக்கி விரைந்து ஓடினான். இதை அறிந்து அப்பெண்ணின் உறவினர்களும் துரத்திக் கொண்டு ஓடினர். அவன் ஆசிரம வாயிலுக்குள் நுழைந்ததும் அப்பெண்ணின் உறவினர்கள் அவனை துரத்தவில்லை. ஆசிரமத்திற்குள் நுழைந்த அவன் தேகந்தமும் நடுங்க பகவான் ரமணரின் திருவடிகளில் விழுந்து

என்னை காப்பாற்றுங்கள்..! காப்பாற்றுங்கள்..!' என்று அலறினான்.

பகவான் அருகில் இருந்தவர்களைப் பார்த்து ஆசிரம கதவுகளை முடும் படி உத்தரவிட்டார். அமைதியாக அந்த நபரைப் பார்த்து

பயப்படாதே.! என்ன நடந்தது சொல்..?' என்று கேட்டார்.

தான் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்ததையும்; அது அப்பெண்ணின் உறவினர்களுக்குத் தெரியவந்ததையும்; அவர்கள் தன்னை பிடித்து கொள்வதற்காக கட்டிவைத்ததையும்; தான் தப்பித்து ஆசிரமத்திற்குள் நுழைந்தது வரை சொல்லி முடித்தான்.

எல்லாவற்றையும் கேட்ட பகவான் அவன் நிலையைப் புரிந்து கொண்டார். அவன் மிது பரிதாபப் பட்டவராய் அன்போடு நோக்கி

இனி பயப்பட வேண்டாம்... போய் தூங்கு...என்றார்.

மறுநாள் காலை அந்த ஆசிரமவாசி வழக்கம் போல் பகவானுக்கு தான் செய்யும் சேவைகைளைத் தொடர்ந்தான். பகவானும் நேற்று இரவு அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போலவே இருந்தார்.

இந்தச் சம்பவம் அந்நகரம் முழுவதும் தெரியவந்தது. அதானால் ஆசிரமத்தில் இருந்த மற்ற ஆசிரமவாசிகள் அந்த நபர் ஆசிரமத்தில் இருப்பதை விரும்பவில்லை. அவன் இனி இங்கு இருந்தால் ஆசிரமத்தின் பெயர் கெட்டுப் போகும் என்று கருதினர். எனவே அவனை ஆசிரமத்தைவிட்டு வெளியே அனுப்பிவிடும் படி பகவானிடம் வேண்டினர்.

பகவான் தவறு செய்த அந்த மனிதரை அழைத்தார். மற்ற ஆசிரமவசிகளின் முன்னிலையில் இவ்வாறு அருளினார்.

நீ ஏதோ ஒரு தவறு செய்துவிட்டாய்... ஆனால் அதை ரகசியமாக வைத்துக்க் கொள்ளத் தெரியாத முட்டாளாய் இருந்து விட்டாய்... மற்றவர்கள் இதை விட கேவலமான தவறுகளை செய்கிறார்கள்... ஆனால் தாம் பிடிபட்டுவிடக் கூடாது என்பதில் கவனாமாக இருக்கிறார்கள்... இப்போது, இன்னும் பிடிபடாதாவர்கள் உன்னை இந்த ஆசிரமத்தைவிட்டு வெளியே அனுப்பும்படி சொல்கிறார்கள்... காரணம் நீ பிடிபட்டு விட்டாய்.., இனி நீ இங்கிருந்தால் உன் வாழ்க்கையை நரகமாக்கி விடுவார்கள்... அதனால் இங்கு நிலைமை சிறாகும் வரை நீ வெளியில் தங்கிக்கொள்... என அருளினார்.

அப்படியே அந்த அசிரமவாசியும் சிறிது மாதம் வெளியில் தங்கி இருந்து விட்டு பிறகு ஆசிரமத்துக்கு வந்து பழையபடி தங்கினார்.

பெரும்பாலானோர் புலன்களின் இன்பத்தில் நாட்டம் உள்ளவர்களே. தகுந்த சந்தர்ப்பம் அமையாதவரை யாவரும் நல்லவரே..! அப்படி அமைந்தும் நெறி தவறாதவர் உத்தமரே.!!

மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று அடையாளம் காட்டுவது சந்தர்ப்பங்கள். சந்தர்ப்பங்கள் காலத்தின் வசம் உள்ளது. உயிர் உடலை விட்டு பிரியும் வரை அவரவர் கர்ம பலன்களுக்கு ஏற்றார் போல் காலம் சந்தர்ப்பங்களை வகுத்து வைத்திருக்கின்றது.

தகுந்த சந்தர்ப்பம் அமையும் போது தவறு செய்து விட்டு, பார்ப்பதும் கேட்பதுமே நிஜம் என்று நம்பி வாழும் மனிதர்களுக்குத் தெரியாமல் பல நாள்கள் மறைத்தும் விடலாம். ஆனால் காலம் நிச்சயம் ஒரு நாள் வெளிப்படுத்தியே தீரும். பிடிபடும் காலம் வாய்க்காதவர்களை தான் பகவான் " இன்னும் பிடிபடாதவர்கள்.." என்றார் போலும்.

மறைவில் தவறு செய்து அதை பிறர் அறியாவண்ணம் மறைத்து காத்து கவனத்தோடு நடந்து கொள்பவர்கள், அதே தவறை வேறொருவர் செய்து பிடிபட்டுக் கொண்டால், அவரை காணும் போதெல்லாம் 'நாம் என்றைக்கு பிடிபடோவோமோ' என்ற குற்ற உணர்வால், பிடிபட்டவரை குறை சொல்லி, கேவலப்படுத்தி தன் குற்ற உணர்வை மறைத்துக் கொள்வார்கள் போலும்.

அதனால் தான் குற்றங்களே இல்லாத பகவான் ரமணர், " நீ இங்கு இருந்தால் உன் வாழ்வை நரகமாக்கி விடுவார்கள்" என்று அந்த ஆசிரமவாசியை வெளியே அனுப்பி வைத்தார் போலும்.

சந்நியாச விதிகளை மீறி, ஒருவர் செய்த தவறை மன்னித்து கருணை காட்டிய அந்த மகானின் திருவடிகளைப் பற்றி நம் தவறுகளையும் மன்னிக்க வேண்டுவோம்.