Wednesday, May 26, 2010

வாழ்க்கை

வாழ்க்கையை விரித்துப் பார்க்க, விருப்பம் வேண்டும்;

விருப்பம் விதை போன்றது.

விதையை, மனதில் புதைத்து வைக்க வேண்டும்.

அது செழித்து வளர,

முறையாக ஊக்கம் என்ற நீரை உற்றி வர வேண்டும்.

காலம் சிலருக்கே தண்ணீர் தருகிறது..!

நம்மில் பல பேர் புதைப்பவர்களாக மட்டுமே இருக்கிறோம்;

தண்ணீர் பஞ்சத்தால்,

விதை வளர்வதற்குள் புதைந்தும் போகிறோம்..!

Thursday, May 20, 2010

யோசிக்க வைத்தவை

பெய்ய வேண்டிய நேரத்தில் நிறைவாக பெய்யிவதில்லை! கத்திரி வெயில், கன மழை பெய்து கொண்டிருக்கிறது. பலத்த காற்று வேறு. மழைக் காலத்தில் வாழ்வது போன்ற உணர்வு! ஒரே நாளில் பருவகாலத்தையே மாற்றிக் காட்டிவிட்டதே இந்த இயற்கை!

இதோ இந்த மழை யாருக்கோ அதிர்ஷ்டமாகவும், யாருக்கோ துர்திர்ஷ்டமாகவும் நிச்சியம் அமைந்திருக்கும்.

எண்ணங்கள் செயல் வடிவம் பெற முயற்சி தேவை; திட்டமிட்ட படி அவை நிறைவேற தெய்வத்தின் அருள் தேவை. வெய்யிலை மனதில் வைத்துக் கொண்டு தங்கள் செயல்களை திட்டமிட்டவர்கள் நிலை என்னவாகும்?

"ச்சே...! இந்த மழை வந்து எல்லாத்தையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிடுச்சு....!" என்று சிலரும்,

"ஒருவேளை இந்த மழை வரலன்ன... இந்நேரம் இந்த வேலை முடிந்திருக்கும்... ப்ச்! போகட்டும் கடவுள் நமக்கு நல்லதை தான் செய்வார்... இதுவும் நல்லதுக்குத் தான்..." என்று சிலரும் நொந்து கொண்டிருப்பார்கள்.

இருவருமே மழையை நொந்து கொள்கிறார்கள்; ஆனால் விதம் வேறு.

ஆணவத்தோடும், அகங்காரத்தொடும், செயலைத் தொடங்கியவர்களுக்கு இந்த மழை தண்டனையாக அமைந்திருக்கும்; ஆண்டவன் ஆசியோடும், நல்ல எண்ணத்தோடும் செயலைத் தொடங்கியவர்களுக்கு இந்த மழை ஆசிர்வாதமாக அமைந்திருக்கும்.

நமக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு; அதை நமக்கு நன்மையாகவும் தீமையாகவும் அமைத்துக் கொள்வது, நம் கையில் தான் இருக்கிறது. 'நான்' என்ற அகங்காரத்தோடு வாழும் வரை, அது நமக்கு தீய சக்தி; அடக்கத்தோடும், அன்போடும் வாழும் வரை, அது நமக்கு நன்மை செய்யும் சக்தி.

நாம் நம் நிகழ் காலத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை திட்டமிடுகிறோம்; நம் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நிகழ் காலத்தை அமைத்துக் கொடுக்கிறார் கடவுள். அகங்காரம் இருக்கும் வரை இந்த சூட்சமம் புரிவதில்லை. அகங்காரம் இருக்கும் வரை ஆசைகளுக்காக செயல்கள் செய்து கொண்டிருப்போம்; ஆண்டவன் சிந்தனை இருக்கும் வரை கடமைக்காக செயல்கள் செய்து கொண்டிருப்போம்.

என் சிறிய அறிவுக்கு வேண்டுமானால், இந்த மழை, காலம் தப்பி பெய்வதாக இருக்கலாம்; ஆனால் அந்தப் பேரறிவுக்கு இது முறையானதே!

Thursday, May 13, 2010

மரம்.

நாம் வெயிலிலும் மழையிலும் ஒதுங்குவதற்கு

இயற்கை தந்த குடை மரம்.

வளர்ச்சி என்ற பெயரால் ஏராளமானவற்றை மடித்து வைத்துவிட்டோம்.

எதை வளர்த்தோம்... ஓசோன் ஓட்டையை.

Wednesday, May 12, 2010

விலாசம்

பச்சைப் புள்ளுண்டு வெள்ளைப் பால் தரும் பசுவே!

கலப்படப் பாலுண்டு கலந்த நீரைப் பிரிக்கும் அண்ணமே!

உப்பு நீருண்டு உண்ணும் நீர் தரும் மேகமே!

நெடுங்காலம் வாழ்ந்தும் நீர் மேல் நிலைத்து நிற்காத பாசியே!

இப் பதங்களை எங்கு கற்றீர்கள்?

மயக்க உணர்வால் மெய்ப் பொருள் உணராமல்

பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கும் நாங்களும்

அப் பதங்களைக் கற்று உய்ய

உங்கள் ஆசிரியர்களின் விலாசங்களைத் தாருங்களேன்!

Saturday, May 8, 2010

வித்தியாசமான அனுபவம்.

பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து வர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன், என்னைக் கடந்து சென்ற அந்த ஆட்டோவின் முதுகுக் கண்ணாடியில் என் உருவத்தைப் பார்த்ததும் வியந்து போனேன்.

'நானா இது'! அந்தப் வெண்மை கலந்த மஞ்சள் நிறப் புது சட்டையில் நான் பளிச் சென்று இருந்தேன். வசதியானவன் போல் இருந்தேன் என்று கூட சொல்லலாம்.

பள்ளியிக்குச் சென்று, குழந்தையை அழைத்துக் கொண்டு, வீட்டுக்குப் புறப்பட்டேன். அது வரை வெயில் அடித்துக் கொண்டிருந்தது; சற்றென்று மேகம் சூழ்ந்தது; சில வினாடிகளில் மழை கொட்ட ஆரம்பித்தது. அது மழைக் காலமும் அல்ல. எங்கிருந்து வந்தது இந்த மழை என்று யோசிப்பதற்குள் நனைந்தே விட்டேன். ஒதுங்குவதற்கு இடம் தேடினேன். அது பங்களாக்கள் நிறைந்த பகுதி, கடைகள் அதிகமாக இருக்காது. நல்ல வேலை மழை வரும் நேரம் நான் ஒருகடையை நெருங்கிக் கொண்டிருந்தேன். அப்பாட என்று அங்கே ஒதுங்கிக் கொண்டேன்.

அவ்வழியே சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியும் வந்து நின்றார். முதுமை ஒரு பக்கமும், வறுமை மறு பக்கமும் உடலை உருக்கி இருந்தது. மழை வலுக்க வலுக்க சாரல் அதிகமானது. அவ்வளவு வெப்பமும் எங்கே போனது என்று தெரியவில்லை. லேசாக குளிர ஆரம்பித்தது. பாட்டி தன் புடைவையின் தலைப்பை இழுத்து உடலை இறுக்கமாக சுற்றிக் கொண்டார். முதுமை காரணமாக அவர் உடலில் மெல்லிய நடுக்கத்தை நான் கவனித்தேன். பாவம் பாட்டி என்ற சிந்தையோடு மழையை வேட்டிக்கைப் பார்த்தேன்.

மழை அடர்த்தியாக பொழிந்துக் கொண்ட்டிருந்தது. எதிரே உள்ள வீடுகள் மங்கலாக தெரிந்தன. மழை நிற்குமா நீடிக்குமா சீக்கிரம் வீட்டுக்குப் போகணுமே என்ற சிந்தனையில் மழையை வேட்டிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு நேர் எதிரே இருந்த வீட்டுக்குள் இருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. தெளிவாக தெரியவில்லை இருந்தாலும் அந்த தோரணையும், மங்கலாக தெரிந்த அரைக் கை சட்டையையும் வைத்து அது ஒரு ஆண் உருவம் என்று முடிவு செய்தேன். சற்று நேரம் மழையை வேட்டிக்கைப் பார்த்தது. மீண்டும் உள்ளே சென்றது.

பாவம் இப்போது பாட்டியால் நிற்க கூட முடியவில்லை; கடையின் கதவருகே அப்படியே சுரண்டு படுத்துக் கொண்டார். புடவையை போர்வையாக்கிக் கொண்டார். இடமும் தாரளமாக இருந்தது.

மழை, ஒரு கனமான கண்ணாடித் திரையைப் போல் எனக்கு தென்பட்டது. பத்து நிமிடத்திற்கு முன் அடித்த வெயில் எங்கே போனது? சில நிமிடங்களில் பருவகாலத்தையே தலைகிழாக மாற்றிக் காட்டுகிறதே! இயற்கை சக்தி வாய்ந்தது என்று வியந்துக் கொண்டே மழையை வேட்டிக்கைப் பார்த்தேன். மீண்டும் அந்த எதிர் வீட்டிலிருந்து அந்த உருவம் வெளியே வந்து சில வினாடிகள் மழையை வேட்டிக்கைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றது.

பத்து நிமிடத்திற்கு மேலாக அடர்த்தியாக பொழிந்துக் கொண்டிருந்த மழை மெல்ல குறையத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தூறலாக மாறியது. இப்போது அந்த உருவம் மீண்டும் வெளியே வந்தது. இம்முறை ஒரு பெண்மணியும் உடன் வந்தார். அந்த உருவம் தெளிவாக தெரிந்தது; நல்ல கம்பிரமாக இருந்தது. அப்பெண்மணி பணியாள் போல் தோற்றமளித்தார். அப்பெண் படியிறங்கி வந்து 'கேட்' டைத் திறந்து விட்டார். அந்த மனிதர் காருக்குள் சென்று அமர்ந்தார். கார் கதுவு வழியாக அப்பெண்மணியை அழைத்து எதோ பேசினார். அப்பெண்மணி நேராக என்னை நோக்கி நடந்து வந்தார். உங்க வீடு பக்கதுலன்னா ஐயா உங்கள உங்க வீட்ல கொண்டு விட்ராராம் கேட்டு வர சொன்னார்…” என்றார் அப்பெண்மணி.

இதை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை; எனக்கு சில வினாடிகள் ஒன்றும் புரியவில்லை. சுதாரித்துக் கொண்டு ' “இல்லை ..... நான் வண்டி வச்சிருக்கேன்... ஒன்னும் பிரச்சன இல்லை ... என்றேன்.

தலையை ஆடிக் கொண்டு சென்று விடார்.

இதற்கு முன் நான் அந்த மனிதரை பார்த்தது கூட கிடையாது. பிறகு எப்படி அவர் என்னை தன்னோடு அழைத்துக் கொண்டு என் வீட்டில் கொண்டு விட முடிவு செய்தார் என்று குழம்பினேன். இந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

ஏனோ தெரியவில்லை என் கவனம் அங்கே படுத்திருந்த பாட்டியின் மீது திரும்பியது. என்னைக் கேட்டது போல் ஏன் இந்த பாட்டியை கேட்கவில்லை; மழையின் பாதிப்பு எனக்கு மாடும் தானா? பாட்டிக்கு இல்லையா? என்று யோசித்துக் கொண்டிருக்கையில்,

அவரின் கார் என்னைக் கடந்து சென்றது. காரின் பக்கவாடுக் கண்ணாடியில் என் உருவன் தெரிந்தது. குனிந்து என் சட்டையைப் பார்த்துக் கொண்டேன்.