Thursday, December 2, 2010

வித்தியாசமான அனுபவம்.


நிசப்தமான காலை வேலை. குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். அந்தக் குரல் என் கவனத்தை ஈர்த்தது.
"நீ பத்திரிக்கைக்கு போ... நீ கம்பியுடருக்குப் போ... நீ I .A .S . க்கு போ..." என்றது ஒரு ஆண் குரல்.
"நான் பத்திரைக்குப் போறேன்... இல்ல, I .A .S. க்கு போறேன்... ஆனா கம்ப்யுடருக்குப் மட்டும் போமாடேன்.." என்றது ஒரு பெண் குரல்.
"ஏம்மா நீ கம்ப்யுடருக்குப் போறியா..." என்றது அதே ஆண் குரல்.
"பத்திரிக்கைக்கு போறேன்... ஆனா கம்ப்யுடேருக்குப் போமாட்டேன்..." என்றது இன்னொரு பெண் குரல்.
"சரி நீயாவது கம்ப்யுடருக்குப் போயாம்மா..!" என்று கெஞ்சலாக கேட்டது அதே ஆண் குரல்.
"இல்ல... வந்து..." என்று இழுத்தது மற்றொரு பெண் குரல்.
இந்த உரையாடல் என் கடந்த கால பதிவுகளை நினைத்துப் பார்க்கும் படி செய்தது.
கணிணித் துறை வளர ஆரம்பித்துக் கொண்டிருந்த காலம் அது. நானும் என் நண்பரும் வணிகம் பயின்றோம். நான் ஒரு கூரியர் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலைக்குச் சென்றுவிட்டேன். வழியில் ஒரு நாள் அந்த நண்பனைப் பார்க்க நேர்ந்தது.
"ஏய்... எப்படி இருக்க..? என்ன பண்ற..?" என்றேன்.
"நல்லா இருக்கேண்டா... இப்ப கம்ப்யூட்டர் கோர்ஸ் ஒண்ணு படிச்சிட்டிருக்கேன்... கோர்ஸ் முடிஞ்சதும் அவங்களே வேல வாங்கி குடுத்திடுவாங்க... நீ என்னப் பண்ற...?" - இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க புறப்பட்டோம்.
பிறகு ஓராண்டு கழித்து ஒரு நாள் அந்த நண்பர் என்னைப் பார்க்க வந்தார்.
"எனக்கு கலிபோர்னியாவுல இருக்கிற சாப்ட்வேர் கம்பெனில வேல கிடைச்சிடுச்சி... இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை தான் இங்க வருவேன்... நாளைக்கு நைட் ப்ளைட்..." என்றார்.
ஐந்தாண்டுகள் ஓடிவிட்டது. இன்று அவர், உலகின் மிகப் பெரிய கணிணி நிறுவனத்தில், உயர்ந்த பதவில், என் ஓராண்டு சம்பளத்தை ஒரு மாத சம்பளமாக வங்கிக் கொண்டிருக்கிறார். எனக்கு அப்போது அந்தத் துறையின் அருமை தெரியவில்லை. இன்று நான் பொருட்களை சந்தை படுத்தும் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
வேறு எந்தத் துறையில் இருக்கும் ஒருவர், பத்து ஆண்டுகளில் அடையக் கூடிய வளர்ச்சியை, கணிணி துறையில் இருக்கும் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்குள் அடைந்து விடுகிறார். காரணம் கணிணித் துறையில் கிடைக்கும் சம்பளம் போல வேறு எந்தத் துறையிலும் கிடைப்பது இல்லை.
இன்று உலகமே கணிணி மயமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாம் தேர்ந்தேடுக்கும் துறை தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இந்த சிந்தனையோடு அந்தக் குரல் வந்த திசை நோக்கி சென்றேன்.
அங்கே ஒரு முதியவர் நின்றிருந்தார். எதிரில் முன்று பெண்மணிகள் நின்றிருந்தனர்.
"இருக்கறது மூணு பேரு... இப்டி எல்லாருமே பத்திரிக்கைக்கும், I .A .S. க்கும் போயிட்டா, அப்புறம் யார் தான் கம்ப்யுடர பாத்துக்கறது..? நீ கம்ப்யுடேருக்குப் போமாட்டேன் சொல்றதுக்கு, எனக்கு காரணம் சொல்லு..." என்று நடுவில் நின்றிருந்த பெண்மணியைப் பார்த்து கேட்டார் அந்தப் பெரியவர்.
"முடியில சார்... கொடத்த தூக்கினு மூணு மாடி ஏற முடியல... இடுப்பு உட்டு போவுது... அந்தே பெரிய ஹால குனிஞ்சு நிமுந்து கூட்ட முடியல சார்... பத்திரிக்கையும், I .A.S . சும் கியவே இருக்குது... மாடி ஏறுற வேல இல்லை... இந்த ரெண்டுத்தல ஏதாவது ஒண்ணுல டுட்டி போட்டு குடு சார்..." என்றார் நடுவில் நின்றிருந்த பெண்மணி பாவமாக.
"சரி..., நீ பத்திரிக்கைக்கே போ..." என்று புலம்பிய பெண்மணியை அனுப்பிவைத்தார்.
இந்தாமா... எனக்காக நீ இன்னிக்கு கம்ப்யூட்டர் போ..." என்று அந்த மூவரில் சற்று வயது குறைவாக இருந்த பெண்மணியை பார்த்து சொன்னார். அவரும் அமைதியாகச் சென்றார். முன்றாமவரை I .A .S . சுக்கு அனுப்பிவைத்தார்.
ஆயாக்களுக்கு வேலையை பிரித்து கொடுத்துவிட்டு நிமதியாக நாற்காலியில் அமர்ந்தார் நூலகர்.