Tuesday, December 31, 2019

"2020 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!!"

Saturday, December 28, 2019

உணர்வு

காலை எழுந்ததும், கட்டிலா  மகிழ்ச்சி,
நாளை துவங்க நாட்டம் பொங்கி,
உள்ளே துள்ளியது உடலைத்  தள்ளியது,
எல்லாம் தினமும்  இயற்றும் பணிதான்,
நீல வானம், நீண்ட பயணம்,
காலத் தில்பிறர் கருணை;  உயர்மலை,
வறண்ட தொண்டை வாய்நீர்; அலைகிளி
நிறவயல்; குலையும் நிலைதரும் கால்சூழ்
கடலலை; மழைமண் கலக்கும் வாசம்;
தொடர்பிலா மழலை தூய  சிரிப்பு;
நான்தொ லைந்து நான்மீண் டநிலை;
தேன்நபர் வாசலில் திடீர்தோற் றம்இவை;
தரும்மன நிலை,சொல் தாண்டிய வுணர்வு,
திருசெய் கருணை தினமும் தொடரவே..!

Monday, December 16, 2019

என்ன மனமோ...


அண்டிப் பிழைத்து அளவு பெருத்ததும்,
கொண்ட வுறவைக்  குழியில் புதைத்து,
இன்னும் பெருக்க இடமே தேடுதே,
என்ன குணமோ என்ன   மனமோ..

Tuesday, September 17, 2019

தெய்வம்


நாளை என்ன நடக்கு மென்று
காலை பொழுதே  காண்பா ரில்லை
நேற்று நடந்த நிகழ்வை  தெளிவாய்
வேற்றுமை  யின்றி விளம்புவா ரில்லை
செய்த  செயலின் தீர்ப்பே பலன்கள்
செயல்பலன் தொடர்பு தெரியா அறிவில்
செய்த  திட்டம்  சிதறும் போது
தெய்வம் நம்பி திடமாய் முயல்க
திருத்தம் செய்து சிறப்பாய் அமைத்து
கருத்தாய் காக்கும் கவலை விடுக
இன்றே  நாளை எட்டிப் பார்த்து,
என்ன நன்மை, என்ன தீமை,
நேரு மென்று  நெஞ்சம் சொன்னால்
யாரும் தெய்வம்  என்றே எண்ணார்.

Thursday, September 5, 2019

மழை


கடந்ததில் செல்லும் கவனம் திருப்பி,
நடப்பு நினைத்திட, நம்முயல் தல்போல்;
மழைவிட்டு விட்டு வருகிறதே மண்ணில்
மழைக்கவனம் ஈர்க்க வளர்ப்போம் மரங்களை;
நாள்நிகழ்வு ஆசையால், நம்நெஞ்சை நம்மிடம்
வால்சுருட்ட  வைப்பது போல். 

Thursday, August 15, 2019

முயற்சி

ஒன்று அடைந்திட, ஓயா முயற்சியில்,
என்று அடைவேன் இறையே யறியேன்.
அறிவு அறியா அழையா தடைகள்;
முறிவு நிகழாது முன்னேற, தாய்போல்,
முயற்சி குறித்தப்பி முட்டாமல் நீள,
பெயர்ச்சி செயவே, பிடித்தது சேர்க்கவே,
உற்ற துணையாய், உளாய்யென நம்பியே,
வெற்றி வரைக்கும் விடாது முயல்வேன்,
இடுப்பி லிருந்து இறக்கிட ஓடும்
துடுக்குக் குழந்தையைப் போல்.

Saturday, August 10, 2019

"தெய்வ நம்பிக்கை".


எதிர்பாரா சூழல், எதிர்காலம் தாங்கும்
புதிர்விடை; யார்க்கு புதிர்பின் விடைமுன்.
நிகழ்பவை யாவுமே நேற்று நிகழ்வின்
தகவல் சுமந்திருக்கும், தப்பினால் நாளை
நிகழ்வின் அறிகுறி; நீயே கதியென
தெய்வ நினைவில் செயல்படும் யாவரும்
செய்யும் செயல்கள் திருத்தமாய் செய்ய
உணர்வால் உணர்த்துவார் உள்நின்று காக்கும்
உணர்வு மொழியில் உரையாடும் அப்பன்.
திடமாக நம்பினால், தெய்வ மடியில்
கிடக்கும் மழலை வாழ்வு.

Sunday, March 31, 2019

மகிழ்ச்சியான தருணம்

நேற்று (30 -3 - 2019 ) சனிக்கிழமை அண்ணா நகர் தமிழ்ப் பேரவையில்,
அருள்மிகு மீனாக்ஷி சிந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு இனிதே நடந்தது.
அண்ணா நகர் தமிழ்ப் பேரவை நிறுவனர் "தமிழ்ச் செம்மல்" மதிப்பிற்குரிய திரு நாகசுந்தரம் ஐயா அவர்களின் 80தாவது பிறந்தநாள் கொண்டாடினோம்.அந்நிகழ்வில் எனக்கு   "தொண்டர் திலகம்" சான்றிதழ் வழங்கினார்கள்..!!!

புகைப்படத்தில், இடது புறம் இருப்பவர்,  அண்ணா நகர் தமிழ்ப் பேரவை நிறுவனர்  "தமிழ்ச் செம்மல்"  மதிப்பிற்குரிய திரு நாகசுந்தரம் ஐயா அவர்கள்.
வலது புறம் இருப்பவர்,  தமிழ் அறிஞர் மதிப்பிற்குரிய திரு மறைமலை இலக்குவனார் ஐயா அவர்கள்.
அடுத்து இருப்பவர், பேரவைத்த தலைவர் மதிப்பிற்குரிய திரு மருத்துவர் அனந்த ராமகிருஷ்ணன் ஐயா அவர்கள்.
அடுத்தது, செயலை மதிப்பிற்குரிய  திரு ராஜரத்தினம் ஐயா அவர்கள்.

மகிழ்ச்சியான தருணம்...!!!







Tuesday, February 12, 2019

எது சரி


இதுதான் சரியென ஏதுமில்லை பாரில்,
எதுஎனக்குச் சரியோ, என்றுமது யார்க்கும் 
இடரிலையோ, அஃதே எனதுசரி. யார்க்கும்
தொடர்ந்து பகல்பொழுது ஏது..!!!

Monday, February 11, 2019

மெய் கண்ட ஞான சபை.

நேற்று( 10-2-2019 ), சென்னை அம்பத்தூரில் உள்ள ஞானமூத்தி நகரில்,   தவத்திரு வள்ளல் கன்னியப்ப சுவாமிகள் அவர்களின்25 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் 59வது ஆண்டு விழா, சிறப்பாக இனிதே நடந்து முடிந்தது.




Monday, January 14, 2019

அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்,

"இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்..!!!"

நன்றி..!!!

Tuesday, January 8, 2019

நட்பு

காலைவெயில் போல்சிலர் கால்சுடும்வெ யில்சிலர்     
மாலைவெயில் போல்சிலர் மக்கள்  குணம்பல;
வேளை   யறிந்தால் வெயிலும் துணையன்றோ  
ஆளை யறிந்தால் அனைவரும் நட்பன்றோ
நாளை இனிதாக்கும் நட்பு