Monday, December 31, 2018

பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் ஆர்வம் உள்ளவர்கள் , முதலில், பங்குச் சந்தைக்கு தேவையான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும், பொருட்களை பயன்படுத்த அல்லது அனுபவிக்க மட்டும் , வாங்குபவர்களுக்கு , பங்குச் சந்தையை புரிந்து கொள்வது சற்று கடினம். பங்குச் சந்தை என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்வதற்கு முன், அவரவர் வாழ்க்கை முறையையும் , அதனால் வளர்த்துக் கொண்ட மனிலையையும் சற்று சிந்திக்க வேண்டும்.

ஆடை வாங்க நினைக்கிறோம். நாம் என்ன யோசிப்போம். இந்த ஆடையை இந்த விலைக்கு வாங்கலாமா. எததனை மாதங்கள் அணியலாம், என்று பயன் கருதி வாங்குவோம். இது தான் நுகர்வோர் மனநிலை.! அந்த ஆடையை அணிவதில் அலுப்பு ஏற்படும் போது அல்லது அதை இனி அணிய இயலாது என்ற நிலை ஏற்படும் போது, கிழிசல் ஏதும் இல்லையென்றால், வசதி யில்லாதவர்களுக்கு கொடுப்போம். கிழிசல் இருந்தால்,சமயலறைக்கோ வாகனம் துடைக்கவோ பயன்படுத்துவோம்.

பணம் கொடுத்துப் பொருள் வாங்கி பயன்படுத்த மட்டும் பழகியவர்களுக்கு அதை விற்று மீண்டும் பணமாக்கும் எண்ணம் பெரும்பாலும் வருவதில்லை. காரணம் நுகர்வோர் மனநிலை. இருப்பினும், சில பொருட்கள், கைபேசி, இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிகள், குளிர் சாதனப் பெட்டிகள், பஞ்சு மெத்தை இருக்கைகள், வீடு, வீட்டு நிலங்கள், போன்ற சிலவற்றை நாம் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். இவற்றை பயன்படுத்துவதில் அல்லது அனுபவிப்பதில் அலுப்போ, புதிதாக வாங்க வேண்டும் என்ற விருப்பமோ உண்டாகும் போது, இவற்றை நாம் யர்ருக்காவது தானம் கொடுத்துவிட்டு புதிய பொருள் வாங்குவதில்லை; மூலையிலும் போடுவதில்லை, மாறாக, வந்த விலைக்கு விற்று மீண்டும் பணமாக மாற்றுகிறோம்.. இப்போது நாம், தெரிந்தோ தெரியாமலோ வியாபாரியாக மாறுகிறோம். இதுதான் வியாபாரி மனநிலை!

பங்குச் சந்தைக்கு தேவை, இந்த வியாபாரி மனநிலை தான். ஆனால், இந்த வியாபாரி மனநிலை அதிக நேரம் நீடிப்பதில்லை. காரணம், வாழ்நாளில் பெரும்பகுதி, பொருட்களை பயன்படுத்துவதிலும், அனுபவிப்பதிலும் கழித்தது தான். விற்று வந்த பணத்தோடு தேவையான பணம் சேர்த்து விரும்பிய பொருளை வாங்கி, பயன்படுத்த அல்லது அனுபவிக்கத் துவங்கிவிடுகிறோம்.மீண்டும் நுகர்வோர் மனநிலைக்கு மாறுகிறோம், தொடர்கிறோம்.

நமக்குள் ஒளிந்திருக்கும் வியாபாரியை மெல்ல மெல்ல வெளிக் கொண்டுவரப் பழகவேண்டும் .ஒரு வியாபாரியாக சிந்திக்கும் போது தான் பங்குச் சந்தையை புரிந்து கொள்ள முடியும். வாழ்க்கையில் பெரும்பான்மையான நேரம் நுகர்வோர் மனநிலையில் வாழ்பவர்களுக்கு, பங்குச் சந்தை என்பது குழப்பமாகத் தான் இருக்கும்.காரணம் பழக்க முறை. மனம் பழக்கத்திற்கு அடிமையானது, பங்குச் சந்தைக்கு தேவையான வியாபாரி மனநிலையை வளர்க்க பழக வேண்டும். வியாபார மனநிலையை வளர்ப்பது எப்படி; வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டே வருமானத்தைப் பெருக்கிக் கொல்வத்து எப்படி.



தொடரும்.....

No comments:

Post a Comment