Friday, November 23, 2018

பழக்கம்



பள்ளிச் செல்லும் பாலர் புரிதல்
வல்ல மைதான் வளரா ததாலே 
சொல்லி வைத்தனர்  சிறார்க்குப் பள்ளியில்
பல்தான் விழுந்தால் பள்ளம் தோண்டிப்
புதைத்திடு மீண்டும் புதுப்பல் முளைக்கவே
கதைதான் எதைதான் காக்கப் புனைந்தது
விழுங்கி விட்டால் விளையாட் டாய்பின்
எழும்தீ  மைகள் எண்ணிச்   சொன்னது
முழுதும் அறிந்த முன்னோர் மனிதர்
பழுதற வாழவே  பழக்கம் பலவே
செய்தனர் பழகியே சிறப்பாய் வாழ்வோம்
மெய்மை அறிவு விளையும் வரையே

Tuesday, November 20, 2018

மனித எடைக்கல்


வத்திக் குச்சி வளர்தீ விரலைக்
கொத்திட உடல்மனம் குதிப்பது போலே
சிலபேர்   நடுங்கச் செய்வர் கண்டதும்
உளம்வளம் மதிப்பிடும் ஒருவாய்ப் பென்று
மனதிடம்  மதிப்பிடும் மனித எடைக்கல்
எனமனம்   அவரை எண்ணிட இன்பமே 

Monday, November 19, 2018

மனம்



கடற்கரை மணலில்  கால்களைக் கடல்நீர்
தடவிச் செல்லத், தடுமாறும் மனம்போல்
ஏன்என்   நெஞ்சில்  எதையோ தொலைத்தது
போன்று, பிரிந்தது  போன்று, தோன்றுதே 

Tuesday, November 13, 2018

இறை வணக்கம்


தலைக்குள் திட்டம் தரைமேல் இறக்கிட,
மலைபோல் தடைகள்; மனதிடம் காத்திட 
உன்அருள் வேண்டும், உழைக்கத் துவங்கினேன்
உன்னை நம்பியே; ஒன்றும் அறிந்திலேன்; 
எவ்விதம் செய்தால் இனிதாய் முடியுமோ, 
அவ்விதம் செயல்கள், அமைந்திட அருள்கவே.

Monday, November 5, 2018

மனம்


தேவை தீரவேத் தேடிப் பழகிடும்,
தேவை தீர்ந்ததும் திரும்பிப் பார்த்திடா,
மனித மனத்தின் வகைகள் பலப்பல...
இனிஎன் வகையுடன் இணைந்திடல் நன்றே...