Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Saturday, September 11, 2021

உள்ளுணர்வு.

ஒப்பிலான் மொழியே உள்ளுணர் வுஅதை 

தப்பிலா தறிந்து  தரணியில் வாழ்பவர்

வாழ்வு,  நெடிது மழலை வேண்டி 

வாழ்பவர் பெற்ற மழலை போலே.


Friday, September 10, 2021

 

                                             விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!!!

Monday, September 14, 2015

யோசிக்க வைத்தவை

காலைப் பொழுது. சுருசுருப்பு, சூரியனைப் போல் மெதுவாக உதித்துக் கொண்டிருந்தது.
படுக்கையிலிருந்து எழுந்த்த்தும், தொலைக்காட்சியில் ஆன்மீக நிகழ்ச்சிகளைப் பார்ப்பது வழக்கம். அது ஒரு ஆன்மீக வினா விடை நிகழ்ச்சி.
வினா : “ நான் தினமும் என் வீட்டில் சுவாமி திருவுருவத்திற்கும், குருவின் திருவுருவத்திற்கும் முன், தீபம் ஏற்றி வருகிறேன். நாங்கள் வெளியூருக்குச் செல்லும் போது சுவாமிக்கும், குருவின் திருவுருவத்திற்கும் தீபம் ஏற்ற முடியாமல் போகிறது. இது தவறா, எதாவது பரிகாரம் உள்ளதா..?”
விடை : “ இந்த மாதிரி வெளியூர் போற சமயத்துல… சுவாமி திருவுருவப் படத்துக்கு முன்னால, குரு திருவுருவப் படத்துக்கு முன்னால, குளிர்ந்த தீபம் ஏத்தி வச்சுட்டு போகனும்னு சொல்லுவா. நாம ஊருக்குப் போயிட்டு வர்ற வரைக்கும் அங்க சுக்ஷும ருபத்துல தீபம் எரிஞ்சுண்டு இருக்கிறதா ஐதீகம்.
குளிர்ந்த தீபம் அப்படின்னா என்ன..? நாம வழக்கமா பயன்படுத்துற விளக்க, சுத்தம் செய்து அதுல நிறைய எண்ணைய விட்டு, திரி போட்டு தீபம் எத்தி, அப்படியே விட்டிடனும். ஒரு கிண்ணத்துல துவரம் பருப்பும், ஒரு கிண்ணத்துல அரிசியும் போட்டு சுவாமி கிட்ட, குரு கிட்ட, வச்சிட்டு வீட்ட பூட்டிண்டு ஊருக்குப் போயிடனும். இதுக்குப் பேரு தான் குளிர்ந்த தீபம்.
நாம ஊருக்குப் போயிட்டு வர்ர வரைக்கும் சுவாமிக்கு ஆகாரம் வேணுமோயில்லியோ அதுக்குத் தான் துவரம் பருப்பும் அரிசியும். ஏன் துவரம் பருப்புத் தான் வெக்கனும்மா வேற பருப்பு வெக்கக் கூடாதா நீங்க கேக்கலாம். துவரம் பருப்பு வைக்கும் போது சம்பூரணம் ஆகறதுன்னு வேதத்தில சொல்லிருக்கு. ஆந்திராவுல பாத்திங்கன்னா தானம் கொடுக்கும் போது துவரம் பருப்ப தான் கொடுப்பா... ஏன்னா அப்ப அந்த தானம் சம்பூர்ணமாகுது.
நம்ம சென்னையில நடந்த ஒரு அதிசயத்த உதாரணமா சொல்லலாம். ஒருத்தர் சென்னையில வசிச்ண்டிருந்தார். அவருக்கு காஞ்சி மகாப் பெரியவா மேல ரொம்ப பக்தி. மகாப் பெரியவா சென்னையில த்ங்கியிருந்த காலத்துல... தெனமும் போய் தரிசனம் பண்ணுவார். அவர் ஒரு முற வெளியூர் போக வேண்டியிருந்தது. அப்ப என்ன பண்ணார்னா... அவர் வீட்ல இருந்த காஞ்சி மகாப் பெரியவா படத்துக்கு முன்னால தீபம் ஏத்தி வச்சுட்டு,
“சுவாமி நான் ஊருக்குப் போறேன். வர்ரதுக்கு ஒரு மாசம் ஆகும். என்னால தீபம் ஏத்த முடியாது. சுவாமி..! நீங்க என்ன மன்னிக்கனும். நீங்க தான் என் வீட்ட பாதுகாக்கனும்; சொத்தப் பாதுகாக்கனும்; உங்கள நம்பித் தான் விட்டிட்டுப் போறேன்”னு மனசார பிரார்த்தன செஞ்சுண்டார். ஊருக்கு கிள்ம்பிட்டார்.
சொத்துன்னா.., அசையும் சொத்து, அசையா சொத்து, ரெண்டுந்தான்... நம்ம கொழந்தைகள் கூட அசையும் சொத்து தான்.
ஊருக்குப் போனவர் ஒரு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசல்ல நிறைய போலீஸ் நின்னின்டிருக்கு. விசாரிச்சதுல, இராத்திரி வீட்டுக்குத் திருடன் வந்ததாகவும்; பூட்ட உடைச்சு உள்ள போன போது, வீட்டுக்குள்ள ஒரு பெரியவர், கையில குச்சி வச்சிக்கிட்டு “திருடாதன்னு” மிரட்டியதாகவும்; இவன் மீறி திருட போன போது, கண் பார்வைய இழந்திட்டதாகவும், தான் செய்த த்ப்புக்கு மன்னிப்பு கேட்பதற்காக வெளியே வந்து அக்கம் பக்கத்துல சொல்லி போலீஸ வர வெச்சதாகவும் தெரிஞ்சுண்டார்.
தான் பூட்ட உடைக்கும் போது உள்ள யாருமில்ல, ஆனா அந்த பெரியவர் எப்படி உள்ளே வந்தார்னு தெரியலன்னு சொல்லி, அவன் பெரியவர் உட்கார்ந்திருந்த இடத்தை விவரித்த் போது, அங்கு தான் ஸ்ரீ காஞ்சி மகாப் பெரியவா திருவுருவப் படம் இருந்தது, அவன் விவரித்த் உருவ அடையாளங்கள் மகாப் பெரியவாளையே உணர்த்தியது.
இவருக்கு கண்ணல ஜலமா கொட்ட ஆரம்பிச்சது, நேர காஞ்சி மடத்துக்குப் போறார்; பெரியவாள தரிசன்ம் பண்ணறார்;. தீர்த்தம் வங்கறதுக்கு வரிசையில் நின்னுடிருக்கார்; இவர் முறை வர்றது; தீர்த்தம் வர்ங்கறச்சே பெரியவா சிரிச்சுண்டே கேக்கறார்,
“என்னடா திருடன் வந்தானா... நீ பாட்டுக்கு என்ன பாதுகாக்க சொல்லிட்டு போயிட்ட...” என்று சொல்லும் போதே அவர் பாத்துல விழுந்து வணங்கினார்.
அது போல ஊருக்குப் போரோமே, சுவாமிக்கும், குருவுக்கும், தீபம் ஏத்த முடியாதேன்னுலாம் வருத்தம் வேண்டாம்... இந்த குளிர்ந்த தீபம் ஏத்தி வச்சிட்டு மனசார வேண்டிண்டு போலாம் தப்பில்லே... தெய்வமும், குருவும் பாதுகாப்பா… “
நிகழ்ச்சி முடிந்த்து
நான் கூட, ஒரு நோய்வாய்ப்பட்ட அசையும் சொத்தை, பாதுகாக்கச் சொல்லி பகவான் ஸ்ரீ ராகவேந்திரர் கிட்ட ஒப்படைச்சேன். பட்டப் பகல்ல, எல்லாரும் இருக்கும் போதே, எமன் வந்து கொண்டுபோயிட்டார். பூஜையறையில அவரும் இருந்தார்.. “எடுக்காதே..!”னு, எமனிடம் ஏன் அவர் உத்தரவு போடவில்லை..?
மனம் சோர்ந்து போனது; விரக்தியாக இருந்த்து; ஆழ்மனதிலிருந்த துக்கங்கள் பொங்கிக் கொண்டிருந்தது; என்னால் தாங்க முடியவில்லை; மனம் குலைந்து போனது; சமாதானம் தேடியது; உட்கார்ந்த இடத்திலிருந்து அசைய முடியவில்லை; சறுக்கும் நிலத்தில் ஊன்றுகோல் போன்றது சான்றோர் வாய்ச் சொற்கள். அப்படி ஒரு வாசகத்தை, மனம், பொங்கிக் கொண்டிருந்த பழய பதிவுகளிலிருந்து பிடித்துக் கொண்டது.
‘… அந்த ராகவேந்தர் உனக்கு நல்லதுதான் செய்வார்…”னு, ஒரு முக்கியமான சந்தர்பத்துல, எப்போதோ என் அம்மாவின் அம்மா என்னிடம் சொன்னது.
மூச்சுத் திணறலிருந்து மீண்டது போல இருந்தது.
தெய்வ நம்பிக்கை, நாற்காலியிலிருந்து இருந்து என்னை மெல்ல எழச் செய்த்து; வழக்கமான வேலைகளை துவங்க ஆரம்பித்தேன்.

Thursday, August 14, 2014

‘எல்லாம் மாற்ற மயம்’

ஐந்து புலன்களும்,
எட்டும் வரை சேகரித்துத் தந்தத் தகவல்களை,
புரிந்து கொண்டு சிந்தித்து முடிவெடுக்கும் நேரத்திற்குள்,
பெற்ற அத்தகவல்கள் மாறிப்போகும் என்னும்
நித்திய உண்மை தெரியாமல் செயல்படும் மனம்,
கிணற்றுத் தவளை போல.
‘எல்லாம் மாற்ற மயம்’
என்பதை புரிந்து கொள்ளாது,
இரை பிடிக்க சிலந்தி பின்னும் வலை போல,
தன் சுயநல ஆசையை தீர்த்துக் கொள்ள,
புலன் அறிவை நம்பி,
அகங்காரத்தோடு செயல் புரிந்து,
மாற்றத்தால் முட்டு பட்டு,
முட்டு நீக்க முயன்று, அது சிக்கலாகி,
அச்செயல் சிக்கலில்,
சிலந்தியே தன் வலையில் சிக்கி கொள்வது போல்
மனம் சிக்கி,
விடுதலையை வெளியே தேடும்,
விடுவிப்பவரை எதிர்நோக்கி ஏங்கி நிற்கும்.
கண்ணுக்கும், காதுக்கும், நாசிக்கும்,
வாயிக்கும், தோலுக்கும்
எட்டாத தூரத்தில் தகவல்கள் இருக்கின்றன.
அவையும் நம் செயகளுக்கு முட்டாக அமையும்.
அந்த எட்டாத அறிவைத் தரும் புலன் பக்தி.
சுயநலத்தை சுத்தப்படுத்தும் தீ.
மனத்தில் ஆண்டவன் ஆட்சி அனுமதித்தால்,
எண்ணத்தில் சுயநலம் சேர்ந்திருந்தாலும், செயலாகும் போது
மாற்றத்தோடு ஒத்து சென்று
மங்காத பலனாக அமையும்.
பக்க விளைவில்லா சித்த வைத்தியம் போல.

Saturday, July 6, 2013

யோசிக்க வைத்தவை

அது மழைக்காலம். சர்க்கரை நோய் விளைவாக அப்பாவுக்கு சிறுநீரகப் பாதையில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அது ஒரு நான்கு மாடி கட்டிடம். பிரதான சாலையில் அமைந்திருந்தது. சன்னல்களில் கண்ணாடி கதவுகள் பொருத்தப்பட்டிருந்தது. மூன்றவது மாடியில் அறை கொடுக்கப்பட்டிருந்தது. அப்பாவை பார்ப்பதற்கு தினம் யாரவது வருவார்கள். அன்று ஒரு தம்பதியர் வந்திருந்தார்கள். நான் அறையை விட்டு வெளியே வந்து வராண்டாவில் நடந்து கொண்டிருந்தேன்.
மாலை சுமார் ஆறு அல்லது ஆறரை மணி இருக்கும். அப்போதுதான் நல்ல மழை பெய்து விட்டிருந்தது. சாலையி நீர் தேங்கிருந்தது. வாகனகளின் இரைச்சல் அதிகமாக இருந்தது. வராண்டாவில் இருந்த ஒரு கண்ணாடி கதவு பொருத்தப்பட்ட சன்னல் அருகில் சென்றேன். வானத்தைப் பார்த்தேன். ஒரு வினாடி அதிர்ந்து போனேன். இதயம் வேகமாக துடித்தது, உடல் ஜில்லிடுப்போனது. பகீர் என்று இருந்தது. இனம் புரியாத பரவசமாகவும் இருந்தது. பயந்து போய் இரண்டடி பின் சென்றேன், ஏதோ ஒரு உத்வேகம் வர முன் சென்று பார்த்தேன். என் பார்வையை என்னால் நம்ப முடியவில்லை. கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தேன். அதே காட்சி தான்.
வானம் மேகமுட்டம் இல்லாமல் இருந்தது. பூமியில் இருப்பது போலவே ஒரு சாலை வானத்தில் தெரிந்தது. அதில் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தது. ஆனால் சாலையின் ஒரு பகுதி மட்டுமே தெரிந்தது. அதில் செல்லும் வாகனங்கள் முன்று அல்லது நான்கு அடி தூரம் சென்றதும் மறைந்துவிடுகிறது. இக்காட்சியைப் பார்த்ததும் சொர்கலோகம் தான் நம் கண்ணில் தெரிகிறதா , நம் பார்வை திறன் கூடிவிட்டதா. வானத்தில் நிகழும் அதிசியத்தை நாம் பார்கிரோமா, என்று இன்னும் எவ்வளவோ எண்ணங்கள் என் மனதில் பொங்கிக் கொண்டிருந்தது.
சில வினாடிகள் நன்றாக் உற்றுப்பார்த்தேன். ஒரு சந்தேகம் வந்தது. சொர்கலோகத்துல தார் ரோடா? எப்படியோ இப்போது என் மனம் அந்த அதிர்ச்சியை தாங்கும் சக்தி பெற்று சம நிலை அடைந்தது. இதயம் சாதாரணமாகத் துடித்தது. குழந்தைத்தனம் மறைந்தது. படிப்பறிவு வேலை செய்தது. இக்காட்சி, அந்தப் பிரதானச் சாலையின் பிரதிபிம்பம். ஏதோ ஒரு கோணத்தில், பிரதானச் சாலையின் ஒரு பகுதி, இந்த சன்னல்களின் கண்ணாடிக் கதவுகள் முலம் வானத்தில் பிரதிபலிக்கிறது என்று தெளிந்தேன். அதை உறுதி செய்து கொள்ள அக்கட்சியை நன்றாக கவனித்தேன். அங்கே செல்லும் வாகனத்தைப் பூமியில் உள்ள பிரதானச் சாலையில் தேடினேன். காணவில்லை. ஆனால் அக்காட்சி அந்த பிரதான சாலையின் பிரதிபிம்பம் தான் என்பதில் சாந்தேகமே இல்லை. சொர்கலோகதுல ஏது ஆட்டோ கார்லாம்.
இதில் ஒரு ஆச்சர்யம். எனக்கு பக்கவாட்டில் பிரதானச் சாலை இருந்தது, அச்சாலையின் காட்சி எனக்கு நேர் எதிராக வானத்தில் தெரிந்தது. இது எப்படி சாத்தியம். ஒளி, எந்தந்த கோணத்தில், எந்தந்த கண்ணாடியில் பட்டு வானத்தில் பிரதிபலிக்கிறது. இந்த சந்தேகத்தை உடனே தீர்த்துக்கொள்ள சன்னல் வழியாக தலையை நீட்டி, எட்டி, எல்லா கண்ணாடிக் கதவுகளையும் அதன் கோணத்தையும் ஆராய்ந்தேன். மூளையை கசக்கினேன். என் அறிவுக்கு எதுவும் எட்டவில்லை. சிறிது நேரத்தில் அப்பா குரல் கொடுத்தார். வந்தவர்கள் சென்றிருக்க வேண்டும். அந்த இடத்தை விட்டு அகன்றேன். அக்காட்சி மட்டும் என் மனதை விட்டு அகலவில்லை.
அப்பாவின் அறுவைச் சிகிச்சை நன்றாக முடிந்தது. விட்டிற்குச் சென்றதும் இணையதளத்தில், ஒளி பிரதிபலிப்பு பற்றிய தகவல்களை தேடித் படித்தேன். நீண்ட நாட்கள் படித்தேன் ஒன்றும் புரியவில்லை. நாட்கள் ஓடின. ஆனால் அக்காட்சியும் , எனக்கு பக்கவாட்டில் இருந்த சாலையின் காட்சி எப்படி எனக்கு நேர் எதிராக தெரிந்தது, என்ற சந்தேகமும் என் மனதை விட்டு ஓடவில்லை.
போக்குவரத்து சமிகைக்காக வாகனத்தில் காத்துக் கொண்டிருக்கும் நேரம், என் முன்னால் நிற்கும் காரின் பக்கவாட்டுக் கண்ணாடியில் தெரியும் உருவங்கள் எங்கே இருக்கின்றன என்று தேடுவேன். கண்ணாடிக்கு எதிர்ல இருக்கிற உருவம் தானே கண்ணாடியில தெரியும், எப்படி அங்க எங்கயோ இருக்கிறவர் இந்த கண்ணாடியில தெரியறார், என்று வாகனம் ஓட்டும் போதும் , சிந்திக்க சமயம் கிடைக்கும் போதும் பல நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இல்லை குழம்பிக் கொண்டிருந்தேன்.
இப்படி பல நாட்கள் அக்காட்சியைப் பற்றி சிந்தித்து சிந்தித்து அறிவியல் உண்மை ஒன்றும் புலப்படவில்லை. ஆனால் ஒரு உண்மை மட்டும் நன்றாகப் புரிந்தது.
அங்கும் இங்கும் பார்த்துவிட்டு நம்மை யாரும் பார்க்கவில்லை, நாம் செய்வது யாருக்குத் தெரியும் என நினைத்துக் கொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், செய்கையும் எப்படியோ, ஏதோ ஒரு கோணத்தில், எங்கேயோ யாருக்கோ, தெரிந்து கொண்டுதான் இருக்கிறது, பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Wednesday, December 21, 2011

தியானம்.

சித்தத்தை, காலி செய்வது தியானம்;
நிரப்புவது அல்ல தியானம்.
மறப்பது தியானம்;
ஞாபகம் அல்ல தியானம்.

மனப்பதிவுகளை,
வேடிக்கைப் பார்ப்பது தியானம்,
பாதிப்படைவது அல்ல தியானம்.
மனதை, புத்திக்கு வசப்படுத்துவது தியானம்;
மனதை ஒடுக்குவது அல்ல தியானம்.

புத்தியால்,
பதிவுகளை களையெடுப்பது தியானம்;
விதைப்பது அல்ல தியானம்.
புத்தி எல்லையை கடந்து செல்வது தியானம்;
புத்திக்குள் சுருங்குவது அல்ல தியானம்.

செயலில்,
நோக்கத்தை கவனிப்பது தியானம்;
செயலின்,
எதிர்விளைவை சிந்திப்பது அல்ல தியானம்.
அகங்காரத்தை,
செயலின் கருவியாக்குவது தியானம்,
கர்த்தாவாவது அல்ல தியானம்.

இயற்கையின் சுபாவத்தை அறிவது தியானம்;
இயற்கையின் இயக்கத்தில்,
குறை காண்பதல்ல தியானம்.
சிந்தனை கோணத்தை மாற்றுவது தியானம்;
சிந்திப்பதை நிறுத்துவது அல்ல தியானம்.

ஆசைகளை கடந்து செல்வது தியானம்;
ஆசைகளை அடக்குவது அல்ல தியானம்.
உண்பது, உறங்குவது போல்,
காலச்செயல் அல்ல தியானம்.
மனம், மெய், மொழி வழி,
இயங்குவதே தியானம்.

மனதில்,
இறைவனுக்கு இடம் ஒதுக்குவது தியானம்;
இயற்கையோடு இசைந்து வாழ்வது தியானம்.

Saturday, December 10, 2011

ஆசை ஒப்பனைக் கலைஞன்.

ஆசை ஒப்பனைக் கலைஞன்.
ஒருவரைப் பிடித்துவிட்டால்,
மனதுக்கு,
அவரின் குறை கூட நிலவு கரை.
பிடிக்காவிட்டால்,
குணம் கூட குறை.
பலன் கருதா பாசம்
நிஜ முகம்.
பலன் கருதும் பாசம்
ஒப்பனை முகம்.
வண்ணப் பொடிகளின்
பெட்டி மனம்;
ஆசை ஒப்பனைக் கலைஞன்;
சருகையும், இலையாகக் காட்டும் ஆற்றல்.
ஆசையின் ஆட்சி அடிதளத்தில்,
அறிவு அங்கே அடிமை.
மத யானைக்கு அங்குசமா..?
ஆசை ஒப்பனைக் கலைஞன்.