செவ்வாய் தோஷம் என்றால் என்ன? - ஒரு முழுமையான ஜோதிட விளக்கம்
தமிழ் ஜோதிடத்தில் திருமணப் பொருத்தத்தின் போது மிகவும் பரவலாகப் பேசப்படும் மற்றும் பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம் 'செவ்வாய் தோஷம்' ஆகும். ஆனால், செவ்வாய் தோஷம் என்பது பயப்பட வேண்டிய ஒன்று அல்ல; அது பற்றிய தெளிவான புரிதல் இருந்தால் தேவையற்ற அச்சங்களைத் தவிர்க்கலாம்.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
ஜோதிடத்தில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் வீரம், தைரியம், கோபம், ஆற்றல், மற்றும் உடன்பிறப்புகளைக் குறிக்கும் கிரகமாகும்.
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில், லக்னம், சந்திரன் அல்லது சுக்கிரன் ஆகிய இடங்களில் இருந்து 1, 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் (பாவங்களில்) செவ்வாய் கிரகம் அமைந்திருந்தால், அது செவ்வாய் தோஷம் என்று அழைக்கப்படுகிறது.
வீடுகளின் முக்கியத்துவம்:
1-ஆம் இடம் (லக்னம்): நபரின் ஆளுமை மற்றும் கோபத்தைக் குறிக்கும்.
2-ஆம் இடம்: குடும்பம் மற்றும் வாக்கு (பேச்சு).
4-ஆம் இடம்: சுகம், வீடு மற்றும் தாய் வழி உறவு.
7-ஆம் இடம்: கணவன் / மனைவி (வாழ்க்கைத்துணை) மற்றும் கூட்டு தொழில்.
8-ஆம் இடம்: ஆயுள் மற்றும் மாங்கல்ய பாக்கியம்.
12-ஆம் இடம்: ஆயுள் சுகம், நித்திரை மற்றும் விரயம்.
செவ்வாய் தோஷத்தின் விளைவுகள் பற்றிய நம்பிக்கைகள்
செவ்வாய் ஒரு உக்கிரமான நெருப்பு கிரகம் என்பதால், மேற்கூறிய இடங்களில் இருக்கும் போது:
திருமணத்தில் தாமதம் ஏற்படலாம்.
தம்பதியரிடையே கருத்து வேறுபாடுகள் அல்லது மனஸ்தாபங்கள் வரலாம்.
வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரக்கூடும்.
இவை பொதுவான ஜோதிட விதிகளே தவிர, ஜாதகத்தில் உள்ள பிற கிரகங்களின் பார்வையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
செவ்வாய் தோஷ விலக்குகள்
எல்லா ஜாதகங்களிலும் செவ்வாய் 1, 2, 4, 7, 8, 12-ல் இருந்தாலேயே தோஷம் ஆகிவிடாது. பல சூழ்நிலைகளில் இந்த தோஷம் நிவர்த்தி ஆகிவிடும்:
சொந்த வீடு / உச்ச வீடு: செவ்வாய் தன் சொந்த வீடான மேஷம், விருச்சிகம் அல்லது உச்ச வீடான மகரம் ஆகிய ராசிகளில் இருந்தால் தோஷம் இல்லை.
குருவின் பார்வை: சுப கிரகமான குரு செவ்வாயைப் பார்த்தாலோ அல்லது செவ்வாயுடன் சேர்ந்திருந்தாலோ தோஷம் முற்றிலும் நிவர்த்தியாகும்.
லக்ன விலக்குகள்: கடகம் மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் யோககாரகன் என்பதால் தோஷம் ஏற்படாது.
சூரியன், சந்திரன் சேர்க்கை: செவ்வாய் சூரியன் அல்லது சந்திரனுடன் இணைந்து இருக்கும் போது தோஷத்தின் வீரியம் குறைகிறது.
சம தோஷப் பொருத்தம்: பெண் ஜாதகத்திலும் ஆண் ஜாதகத்திலும் ஒரே மாதிரியான செவ்வாய் தோஷம் அமைந்தால், தோஷம் தோஷத்தால் அடிபட்டுவிடும் (ஈடாகிவிடும்).
செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்
செவ்வாய் தோஷம் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் பின்வரும் பரிகாரங்களைச் செய்வது நல்லது:
கோவில் வழிபாடு:
மயிலாடுதுறை அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் சென்று அங்காரகனை (செவ்வாய்) வழிபடுதல்.
அறுபடை வீடுகளில் உள்ள முருகப்பெருமான் திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுதல்.
வழிபாட்டு முறைகள்:
செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து நெய்தீபம் ஏற்றுவது.
செவ்வாய்க்கிழமை தோறும் கந்த சஷ்டி கவசம் அல்லது சுப்பிரமணிய புஜங்கம் பாராயணம் செய்வது.
தானங்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் ஏழைகளுக்கோ அல்லது துப்புரவு தொழிலாளர்களுக்கோ துவரம்பருப்பு, சிவப்பு நிற ஆடைகள் தானம் அளிப்பது.
முடிவாக
செவ்வாய் தோஷம் என்பது திருமண வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கும் ஒரு சாபம் அல்ல. சரியான ஜோதிட வழிகாட்டுதல் மூலம் ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து, தோஷ விலக்குகளைப் புரிந்து கொண்டு, பொருத்தமான ஜாதகத்தைச் சேர்த்து திருமணம் செய்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். பயமின்றி தெளிவான அணுகுமுறையுடன் செயல்படுவதே சிறந்தது.
*****************************************
உச்சம் பெற்ற கிரகம்
நீச்சம் பெற்ற கிரகம்.
ஒருவர் ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகம் உச்சம் பெற்று இருந்தால், அந்த கிரகத்தின் காரகத்துவங்கள், அதாவது பொருட்கள் மற்றும் பண்புகள், அவர்களிடம் இருக்கும், இல்லை என்றால் தசா காலங்களில் வந்து சேரும், ஆனால் அவற்றை கண்டுகொள்ள மாட்டார்கள்; பெரிதாக நினைக்க மாட்டார்கள். ஆனால் அவற்றை பார்க்கும் மற்ற மனிதர்கள் மிகவும் சிறப்பித்து பாராட்டுவார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகம் நீச்சம் பெற்று இருந்தால் அந்த கிரகத்தின் காரகத்துவங்கள் அதாவது, பொருட்கள் மற்றும் பண்புகள், இவற்றிற்காக ஏங்குவார்கள். அக்கிரகத்தின் தசா காலங்களில் அவை கிடைக்கப் பெறுவார்கள். ஆனால் அவை கிடைத்தாலும் மனதளவில் நிறைவை உணரமாட்டார்கள். காரணம் மற்ற மனிதர்கள் இவருக்கு நடந்த நன்மையைப் பார்த்து சிறப்பித்து பாராட்ட மாட்டார்கள் மாறாக, இழிவாகப் பேசுவார்கள்.
எடுத்துக் காட்டாக, உச்சம் பெற்ற கிரகம் கொண்ட ஜாதகர் ஒருவருக்கு திருமணம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆயிரம் பேருக்கு மேல் திருமணத்திற்கு வருகிறார்கள், பல வகையான உணவு விருந்து இருக்கும். திருமணத்துக்கு வந்தவர்கள் இப்படி பேசுவார்கள் "என் வாழ்நாளில் இப்படி ஒரு திருமணத்தை நான் பார்த்தது இல்லை, என்ன சாப்பாடு ஆஹா! மாப்பிளைக்கும் பொண்ணுக்கும் நல்ல பொருத்தம்." .
நீச்சம் பெற்ற கிரகம் கொண்ட ஜாதகரக்கும் திருமணம் இதே போன்று தான் நட. ஆயிரம் பேருக்கு மேல் வருவார்கள், பல வகையான உணவு விருந்து இருக்கும். திருமணத்துக்கு வந்தவர்கள் நன்றாக சாப்பிட்டு விட்டு இப்படி பேசுவார்கள், "இவனுக்கு என்ன தகுதி இருக்கு... இவன் என்ன சம்பாதிக்கிறான்? இவனுக்கு இவ்வளவு ஆடம்பரமான கல்யாணமா? இவனுக்கு பொன்ன கொடுத்ததற்கு பதிலா வேற யாருக்காவது கொடுத்திருக்கலாம். கிளியை வளர்த்து பூனையிடம் கொடுத்தாங்க!"
இதனால் தான் நீச்சம் பெற்ற கிரகம் உள்ள ஜாதகர், மிகப் பெரிய நன்மை அடைந்தாலும், மனதளவில் நிறைவை உணரமாட்டார்கள்.
உச்சம் பெற்ற கிரகம் கொண்ட ஜாதகர் மற்றும் நீச்சம் பெற்ற கிரகம் கொண்ட ஜாதகர், இருவருக்கும் தசா காலங்களில் நடக்கும் நன்மை ஒரே விதமாகத் தான் இருக்கும். ஆனால் அவற்றை அவர்கள் அனுபவிக்கும் மன நிலையில் வேற்றுமை இருக்கும். உச்சம் பெற்ற கிரகம் கொண்ட ஜாதகர் அவற்றை பெரிதாக கண்டு கொள்ளாமாட்டார்; நீச்சம் பெற்ற கிரகம் கொண்ட ஜாதகர் அவற்றை அடைந்தும் மன நிறைவு அடைய மாட்டார்.
இனி எந்த கிரகம் எந்த மனையில் உச்சம், நீச்சம் அடைகின்றன என்று பார்க்கலாம்.
சூரியன் மேஷ மனையில் உச்சம்,
துலாம் மனையில் நீச்சம்;
சுக்கிரன் மீன மனையில் உச்சம்
கன்னி மனையில் நீச்சம்;
புதன் கன்னி மனையில் உச்சம்,
மீன மனையில் நீச்சம்;
சந்திரன் ரிஷப மனையில் உச்சம்,
விருச்சிக மனையில் நீச்சம்;
சனி துலாம் மனையில் உச்சம்,
மேஷ மனையில் நீச்சம்;
குரு கடக மனையில் உச்சம்,
மகர மனையில் நீச்சம்;
செவ்வாய் மகர மனையில் உச்சம்,
கடக மனையில் நீச்சம்.
******************************************
பஞ்சாங்கம் ஓர் அறிமுகம்!
பஞ்சாங்கத்தால் நாம் அடையும் நன்மையைப் பார்ப்போம். குடும்பத்தில் குழப்பம், மனக்குறை, வீட்டில் அமைதி இல்லாத நிலை, போன்றவை தினமும் வீட்டில் பஞ்சாங்கம் படித்து வர மாறுவதை உணரலாம்.
அன்றாடம் குளித்து இறை வழிபாடு செய்து பஞ்சாங்கத்தில் உள்ள வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் படியுங்கள் மெல்ல மெல்ல உங்கள் மனக்குறை, குடும்ப சூழ்நிலை மாறுவதை உணர்வீர்கள். அது மட்டுமல்ல எப்போது நோம்பு இருந்தால் என்ன நன்மை உண்டாகும் என்பதை பஞ்சாகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஒருவர் தான் பிறந்த கிழமை வரும் நாளில் நோம்பு இருந்து இறைவனை வழிபட்டால் கண்டங்களில் இருந்து தப்பிக்கலாம்.
ஒருவர் தான் பிறந்த திதி வரும் நாளில் நோம்பு இருந்து இறைவனை வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும்.
ஒருவர் தான் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் நோம்பு இருந்து இறைவனை வழிபட்டால் பிறவிப் பாவம் நீங்கும்.
ஒருவர் தான் பிறந்த யோகம் வரும் நாளில் நோம்பு இருந்து இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும்.
ஒருவர் தான் பிறந்த கரணம் வரும் நாளில் நோம்பு இருந்து இறைவனை வழிபட்டால் காரிய வெற்றி உண்டாகும்.
இனி பஞ்சாங்கம் என்றால் என்ன என்று பார்ப்போம். பஞ்ச கூட்டல் அங்கம் பஞ்சாங்கம். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். அங்கம் என்றால் உறுப்பு என்று பொருள். பஞ்சாங்கம் என்றால் ஐந்து உறுப்புகள் கொண்டவை என்று பொருள்.
வாரம் அல்லது கிழமை
திதி,
நட்சத்திரம்,
யோகம்,
கரணம் இவையே ஐந்து உறுப்புகள் ஆகும்.
பஞ்சாங்கம் பஞ்ச பூதங்களின் அடிப்படையில் உருவானது.
பஞ்ச பூதங்கள் என்பது ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நீலம் ஆகும். பஞ்சாங்கத்தின் ஒவ்வொரு உறுப்பும் பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு உறுப்போடு தொடர்புடையவை.
கிழமை நெருப்பு பூதத்தோடும்,
திதி நீர் பூதத்தோடும், நட்சத்திரம் காற்று பூதத்தோடும், யோகம் ஆகாய பூதத்தோடும், கரணம் நிலம் பூதத்தோடும் தொடர்புடையவை.
கிழமைகள் அல்லது நாள்கள் ஏழு ஆகும்.
திதிகள் இருபத்தி ஏழு ஆகும். நட்சத்திரங்கள் இருபத்தி ஏழு ஆகும். யோகங்கள் இருபத்தி ஏழு ஆகும். கரணங்கள் பதினொன்று ஆகும்.
பஞ்சாங்கம் பார்த்து நல்ல நாளை தேர்ந்தெடுத்து, நோம்பு நோற்று, வாழ்வில் வேண்டிய பலனை அடைந்து, இன்பமாக வாழ்வோம்.
†***************************************†
நம் குணமும் லக்கினப் புள்ளியும்.
நாம் பழகும் மனிதர்களில் சில பெரியவர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வதையும், சில சிறுவர்கள் பெரிய மனிதரைப் போல் பேசுவதையும் பார்த்திருப்போம். இதற்கு ஜோதிட ரீதியான காரணம் தெரிந்துகொள்வோம்.
நம் லக்னப்புள்ளியின் பாகை அளவே இதற்கு காரணம்.
ஒவ்வொரு ராசியும் முப்பது பாகை அளவு கொண்டது. கோள்கள் பலன் தரும் அளவை கண்டறிய இந்த முப்பது பாகையை ஐந்து பகுதிகளாக பிரிக்கிறார்கள். அதாவது ஒரு பகுதியின் அளவு ஆறு பாகை என்று. பூஜ்ஜியம் முதல் ஆறு பாகை வரை உள்ள பகுதியை பாலவம் என்றும், ஆறிலிருந்து பன்னிரண்டு பாகை அளவு கொண்ட பகுதியை குமாரம் என்றும், பன்னிரண்டிலிருந்து பதினெட்டு பாகை அளவு கொண்ட பகுதியை எவ்வனம் என்றும், பதினெட்டிலிருந்து இருபத்தி நான்கு பாகை அளவு கொண்ட பகுதியை விருத்தம் என்றும், இருபத்து நான்கிலிருந்து முப்பது பாகை அளவு கொண்ட பகுதியை மரணம் என்றும் பெயரிட்டுள்ளார்கள்.
லக்கினப் புள்ளியோ கிரகமோ ஐந்து பாகையில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அது பாலவ அவஸ்தையில் உள்ளது என்று பொருள். அது தரும் பலன் கால் பங்கு அளவே.
பாலவம் கால் பங்கு பலன், குமாரம் அரை பங்கு, எவ்வனம் ஒரு பங்கு, விருத்தம் தரும் பலன் கிடைத்தாலும் அனுபவிக்க இயலாது, மரணம் தரும் பலன் பூஜ்ஜியம்.
ராசியை ஒற்றைப் படை ராசி என்றும் இரட்டை படை ராசி என்றும் பிரிப்பார்கள். ஒற்றைப் படை ராசியில் மேலே சொன்னபடி முறையே பாலவம், குமாரம், எவ்வனம், விருத்தம், மரணம் என்று கணக்கிட வேண்டும். ஆனால் இரட்டை படை ராசியில் தலைகீழாக கணக்கிட வேண்டும். மரணம், விருத்தம், எவ்வனம், குமாரம், பாலவம் என்று கணக்கிட வேண்டும். அதாவது இரட்டை படை ராசியில் லக்கினப் புள்ளியோ கிரகமோ ஐந்து பாகையில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அது மரண அவஸ்தையில் உள்ளது. அதன் பலன் பூஜ்ஜியம்.
ஒருவரின் லக்கினப் புள்ளி ஒற்றைப் படை ராசியில் பூஜ்ஜியத்தில் இருந்து ஆறு பாகைக்குள் இருந்தால் அல்லது இரட்டை படை ராசியில் இருபத்தி நான்கு பாகையிலிருந்து முப்பது பாகைக்குள் இருந்தால் அவருக்கு எவ்வளவு வயதானாலும் அவருக்குள் குழந்தைத்தனம் குடி கொண்டிருக்கும்.
அதே போல் ஒருவரின் லக்கினப் புள்ளி ஒற்றைப் படை ராசியில் இருபத்தி நான்கு பாகையிலிருந்து முப்பது பாகைக்குள் இருந்தால் அல்லது இரட்டை படை ராசியில் பூஜ்ஜியம் பாகையிலிருந்து ஆறு பாகைக்குள் இருந்தால் அவர் சிறு வயதிலேயே பெரிய மனிதரைப் போல் நடந்து கொள்வார்.
***************************************
